ஆனைமலை ஓடையகுளம் பகுதியில் சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழைகள்

By KU BUREAU

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஓடையகுளம் பகுதியில் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைத் தோட்டங்களை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று பார்வையிட்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஆனைமலை ஒன்றியம் வேட்டைக்காரன்புதூர், ஓடைய குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாறைப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதையடுத்து, தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், அமைச்சர் சு.முத்துசாமி சேதமடைந்த வாழைத் தோட்டங்களை நேற்று பார்வையிட்டார். ஆனைமலை வழியாக செல்லும் ஆழியாறு, உப்பாற்றில் பரவி உள்ள ஆகாயத் தாமரையையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆனைமலை பகுதியில் பெய்த மழையால் பெரிய அளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட வாழை மரங்கள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்த பிறகு, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வாழைப் பயிர்களுக்கு காப்பீடு பெறுவதில் உள்ள சிக்கல்களை களைந்து அதிகாரிகளுடன் பேசி காப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE