மதுரை: மதுரை செல்லம்பட்டியைச் சேர்ந்த ஐராவதம் தெற்காறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த விவசாயிகள், ‘கஜன்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை விற்பனை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், ஐராவதம் தெற்காறு உழவர் உற்பத்தி யாளர் நிறுவனம் 2023-ல் தொடங் கப்பட்டது. இதில் செல்லம்பட்டி, சேட பட்டி, செக்கானூரணி, திருமங்கலம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 620 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் முதன்மைச் செயல் அலுவலராக தி.கவிஹரன் இருந்து வழி நடத்து கிறார்.
இதில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இ-நாம் திட்டத்தில் கொப்பரைத் தேங்காய், எள் கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்யாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நிறு வனத்தில் சேமித்து வருகின்றனர். அடுத்தகட்ட முயற்சியாக சமையலுக்குத் தேவையான 22 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை ‘கஜன்’ என்ற பெயரில் ரூ.988-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மளிகைத்தொகுப்பு முயற்சியை பாராட்டிய மதுரை மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குநர் வி.மெர்ஸி ஜெயராணி அதனை மற்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார். உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள் ரஞ்சித்குமார், பாண்டிகுமார், ஆறுமுகம், திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.
» கோடை மழை பெய்ததால் பழநியில் விவசாய பணிகள் மும்முரம்
» ஒத்தக்கடை அரசு ஆண்கள் பள்ளியில் 23 ஆண்டுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு
இது குறித்து முதன்மைச் செயல் அலுவலர் கவிஹரன் கூறியதாவது: இ-நாம் திட்டத்தில் கொப்பரைத் தேங்காய், எள் ஏலம் எடுத்து எங்களது நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் செக்குகளில் எண்ணெய்யாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். இதனால் குறைந்த செலவில் தரமான எண்ணெய் விற்பனை செய்கிறோம். அதேபோல், மதுரையில் உள்ள கடைகளில் இருந்து தரமான மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.
இதன் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். இதில் கிடைக்கும் வருமானம் எங்களது நிறுவனத்துக்கு பயன்படுகிறது. கஜன் மளிகைப் பொருட்கள் தொகுப்பில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கடுகு, மிளகு, வெந்தயம், துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மிளகாய் வத்தல் உட்பட 22 வகையான பொருட்களை ரூ.988-க்கு விற்பனை செய்கிறோம்.
இதன் மூலம் எங்கள் உறுப்பினர்களுக்கு தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதோடு, இதில் கிடைக்கும் வருவாயும் விவசாயிகளின் நிறுவனத்துக்கே கிடைக்கிறது. வருங்காலங்களில் விவசாயிகளையே பொருட்களை விளைய வைத்து கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.